கனல்மணக்கும் பூக்கள். (சிறுகதைத் தொகுப்பு)
கானல்நீர்…
குறுநாவல்
ஆதனூரான்
கானல்நீர்…
குறுநாவல்
ஒன்று.
பவானி அலுவலகத்திற்கு அவசர அவசரமாகக்
கிளம்பிக்கொண்டு இருந்தாள். யாரோ அழைப்புமணியை அடிக்கும் ஓசை கேட்கவே, அவளது தாயார்
வேகமாகச்சென்று கதவைத்திறந்தாள். வாயிலில் பவானியின் அலுவலகத்தோழி யாழினி நின்றிருந்தாள். குட்டைப்பாவாடையும், மேலே பலவண்ணத்தில் மின்னும் பனியனுமாக நின்றிருந்தாள்..
``என்னடி பவானி, எங்கே இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டே? இன்னிக்கு ஆபீசுகூட
கிடையாது சன்டே, எங்கே கிளம்பிட்டே? இன்னிக்கு லீவுநாளாச்சே, உன்னோட அவுட்டிங் போகலாமேன்னு நினைச்சேன்…” என்று இழுத்தாள்
யாழினி. அவளது குரல்
யாழை ஒத்த மெல்லியதாக இனிமை கலந்து ஒலித்தது.
பவானி தலையில் மெல்ல தட்டிக்கொண்டாள்.
``ஓ..ஓ.. இனிக்கு ஞாயித்துக்கிழமையில்லே; மறந்தே போச்சுடி. நேத்திக்குக்கூட ஆபீசுக்குப்போகவேண்டியிருந்ததாலே,
இன்னிக்கு சன்டேங்கறதே மறந்துபோச்சுடீ. சரிசரி வா, வந்து உட்கார்ந்துக்கோ. அம்மா யாழினி வந்திருக்களே அவளுக்கு ஒருகப் காபி கொண்டுவரியா..” என்று குரல் கொடுத்தபடி யாழினியுடன் சோபாவில் அமர்ந்தாள்.
``ஏண்டி பவானி, இப்போ என்ன காபி வேண்டியிருக்கு, டிபன் சாபிட்டுட்டு
காபியும் சாப்பிடலாமே. நீ இன்னும் டிபனே சாப்பிடல்லியே ஞாபகம் இல்லையா? என்னவோபோடி, வரவர ஒனக்கு எதுவுமே ஞாபகத்துல இருக்கறதில்லே. இன்னிக்கு ஞாயித்துக் கிழமைங்கறதைக்கூட
இப்படி மறந்துபோயி ட்ரஸ் பண்ணிண்டு கிளம்பிட்டயே, எங்கேயாவது
வெளியிலே யாரையாவது முக்கியமா பார்க்கத்தான் போயிண்டிருக்கியோன்னு நினைச்சேன்.
ஒங்கிட்டே கேட்டா கோவிச்சுப்பே. அதனாலதான் ஒண்ணும்
புரியாம என்வேலையைப் பார்த்துண்டிருந்துட்டேன். ஏண்டி யாழிணி ஒன்னேட ப்ரண்டுக்கு
என்னடி ஆச்சு. ஒனக்கு
ஏதாவது தெரியுமோ? வா, வந்து ரெண்டுபேரும்
டைனிங்க் டேபிள்லே டிபன் வெச்சிருக்கேன் வந்து சாப்பிட்டுண்டே பேசிண்டிருங்கோ”
என்று அடுக்களையிலிருந்து பவானியின் தாயார் மங்களம் குரல்கொடுத்தாள்.
``சரிமாமி, நானும் இன்னும் டிபன் சாப்பிடல்லே. வாடி பவானி ரெண்டுபேரும்
டிபன் சாபிடலாம்.” என்ற யாழினி எழுந்து பவானியின் கையைப்பிடித்து
இழுத்தாள்.
``இன்னிக்கும் டிபன் இட்டிலிதானா?
சரிசரி வர்ரேன்.” என்றவள் எழுந்து கைகழுவிவிட்டு
உணவு மேசையின்முன் வந்து அமர்ந்து, தட்டில் சுடச்சுட ஆவிபறக்கும்
இட்லியை விண்டு நெய்யில்கலந்த மிளகாய்ப்பொடியில் தோய்த்து, பின்னர்
தேங்காய்சட்டினியிலும் மெல்லத்தோய்த்து நளினமாக இரண்டு விரல்களால் எடுத்து உண்ண ஆரம்பித்தாள்
பவானி. அவள் உண்பதையே
கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த யாழினி, ``எப்படிடீ இவ்வளவு
அழகா உன்னால மட்டும் சாப்பிட முடியறது.
கையில ஒட்டியும் ஒடாமலும், ரொம்ப நாசூக்கா
சாப்பிடறியே. நானும்
உன்னை அடிக்கடி பாத்து, உன்னைப்போல சாப்பிடணும்னு நினைச்சு முடியல்லேடி”
என்று அங்கலாய்த்தவாறு சாப்பிடலானாள்.
அப்பொழுது பவானியின் தந்தை நடேசன்,
``மங்களம், எனக்கும் பசிக்கிறது. டிபன் தர்றியா..” என்று கேட்டுக்கொண்டே, குளித்துவிட்டுத் தலையைத் துவட்டிக்கொண்டே வந்து உணவு மேசைப்பக்கம் வந்தவர்,
சற்று பின்வாங்கினார்.
அங்கே, தனது மகளும் அவளது தோழியும் உண்பதைப்
பார்த்தவர், ``சரி., அப்புறமா சாப்பிட்டுக்கறேன்”
என்று சொல்லியபடி தனது அறைக்குள் நுழைந்தார்.
``ஏண்டி பவானி, உன் அப்பாவும்தான் வந்து சாப்பிடட்டுமே, ஏன் நாம சாப்பிடறதைப்பார்த்துட்டு
போகணும்.?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள் யாழினி. பவானி அவளது கையைத்தொட்டு,
கண்ணால் ஜாடைசெய்தாள். பின்னர் மெல்லியகுரலில்,``அப்படித்தான்” என்றாள்.
யாழினிக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் பவானியின் இல்லத்திற்கு அடிக்கடி
வந்து போகுபவளாக இருந்தாலும், இன்றைய நிகழ்ச்சி அவளுக்குப் புதிதாகவும்,
ஆச்சர்யமாகவும் இருந்தது. ஆனால், மேலும் பவானியிடம் விளக்கம் கேட்டாள் அவள் கோபித்துக்கொண்டு விடுவாளே என்பதால்
ஏதும் மேற்கொண்டு வினவாமல் சாப்பிடலானாள்.
``ஏண்டி யாழினி, ஒனக்கும் வயசு ஏறிண்டே போறதே, எப்போ கல்யாணம் பண்ணிக்கப்போறதா
உத்தேசம்?” என்று மங்களம் அம்மையார் உள்ளேயிருந்து குரல் கொடுத்தாள்.
``மாமி,
எனக்கு மறுபடியும் கல்யாணம் எதுக்கு மாமி? ஒருத்தரை கல்யாணம் செஞ்சுண்டு பட்ட கஷ்டமெல்லாம் போதாதா? இப்போ நான் ஃப்ரீபேர்ட் மாமி. எனக்குன்னு யாருமே இல்லை. என்னோட அம்மா மட்டும்தான் இருக்கா. நான் இப்படியே இருந்துடறேனே”
``அம்மா போதும். கல்யாண புராணத்தை கொஞ்சம் நிறுத்தறயா?
ஒனக்கு வேற வேலையே இல்லையா?
என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு நச்சரிசுக்கிட்டிருந்தே. இப்போ இவளையுமா? கொஞ்சம் எங்களை ஃப்ரீயாத்தான் விடேன்.”
என்று எரிந்து விழுந்தாள் பவானி.
``நான் ஒண்ணும் பேசல்லேடி அம்மா, ரெண்டு கல்யாணம் பண்ணிண்டும்
விடியல்லியேன்னுதான் மனசுக்குக் கஷ்டப்பட்டுண்டிருக்கேன். ஒனக்கெல்லாம்
இது எப்போ புரியப்போறதோ”
``இதோபாரும்மா. இந்த ஜென்மத்துல ஒனக்கும் விடியப்போறதில்லை. எனக்கும்
விடியப்போறதில்லை.”
``எனக்கென்னடி குறைச்சல்? எனக்குத்தான் ஆம்படையான் இருக்கானே. சொத்தையோ நொள்ளையோ,
நான் சுமங்கலியா வாழ்ந்துண்டு தானே இருக்கேன். ஒன்னாட்டமா, வாழா வெட்டியா, சுமங்கலியா அமங்கலியா இல்லை வாழாவெட்டியா
என்னன்னே புரியாமலா வாழ்ந்துண்டிருக்கேன்.
நானும் சம்பாதிக்கிறேன். என் ஆத்துக்காரரும் சம்பாதிக்கறார். ஆனாலும், என்னோட
எதிர்பார்ப்புக்கு ஏத்தமாதிரி எதுவும் அமையல்லை. அதுக்காக ஆத்துக்காரரே வேண்டாம்னா
சொல்லி ஒதுக்கி வெச்சுட்டேன்.” மங்களம் ஆக்ரோஷமாகக் கத்தினாள்.
``இப்போ ஏம்மா வீணா கத்திண்டிருக்கே? நான் பெரிய பணக்காரியா ஆகணும். அதுக்கு என்னோட சம்பாத்தியம் மட்டும்
போதாது. நான் கல்யாணம்
பண்ணிக்கறவனும் நிறைய சம்பாதிக்கணும்.
இல்லேன்னா பிறப்பிலேர்ந்தே கோடீஸ்வரனா இருக்கணும். உன்னோட மூத்த மாப்பிள்ளை கணேசன்,
பெயருக்கேத்தமாதிரி யானையாட்டமா உப்பிப்போனானே தவிர பணம் சம்பாதிக்கறதில
ஒண்ணுமில்லை. வாய் மட்டும்
ரொம்ப நீளம். தான்தான்
ஒலகத்துலேயே பெரிய கெட்டிக்காரங்கற மாதிரி பேசுவான். ஆனால், எதுக்கும்
லாயக்கில்லை.”
``நீதானே குழந்தை இப்போ வேண்டாம் அப்போ வேண்டாம்னு இருந்தே. அவனிட்டே என்ன குத்தத்தைக் கண்டுட்டே?”
``அம்மா, அம்மா போதும். மானத்தை வாங்காதே. ஒரு கொழுத்த யானையோட எப்படிம்மா குடித்தனம் பண்ணி புள்ள பெத்துக்க முடியும்?
எனக்குப்புடிக்கல்ல.
அத்தோட, என்னைவிட குறைஞ்ச சம்பளம்தான் வாங்கினான். வேற கம்பெனி எதுக்காவது மாறித்தொலைன்னு
சொன்னேன்.
மாறினான்.
அங்கேயும் வாய சும்மா வெச்சுக்காம எல்லோரையும் எடுத்தெறிஞ்சு
பேசி அந்த வேலையிலேயும் பிரமோஷன் இல்லாமல் அப்படியேதான் இருந்தான். சரி, நான் வேல
பார்க்கற கம்பெனியிலாவது வான்னு அழைச்சுண்டேன். அங்கேயும் சரியா இல்லை. பணம் சம்பாதிக்க வக்கில்லாதவனோட நான் எப்படிம்மா வாழறது. நல்ல தீனிப்பண்டாரம். நல்லா கொட்டிண்டு கொட்டிண்டே ஊதிப்போயிட்டான். அதுக்கு அவனோட அம்மா வேற சப்போர்ட்டு.
“
``அதுக்காக, அவனை டைவர்ஸ் பண்ணுவியா என்ன? பாவம்டி அந்த அம்மா. நானும் அந்த அம்மாவை பாடாய் படுத்திட்டேன். ஏதோ கொஞ்சம் பேசுவாளே தவிர நல்ல பாசக்காரிடீ. அவளை நீ மாமியாரா அடைஞ்சதுக்கு நீதான்
குடுத்து வெச்சிருக்கணும்.”
``ஆமாம் நல்லவதான். ஆனால், அவகிட்டேயும் சல்லிக்காசு இல்லையே தன்னோட பிள்ளையைத்தானே நம்பிண்டிருந்தா. அந்த யானைக்குட்டி, தன்னோட சம்பளம் எல்லாத்தையும் அந்தம்மாட்டேதானே குடுத்தான். போதாக்குறைக்கு என்னோட சம்பளமும்
வேணுமாம். குடுத்தேனே. வாங்கிண்டு என்ன பண்ணினாங்க? உப்பு புளி மிளகாய் வாடகைன்னுதானே
செலவு பண்ணினாங்க. ஒரு
சொந்த வீடு வாங்கணும்னு நெனைச்சுக்கூடப் பார்க்கல்லியே. என்னோட நீண்ட நாள் கனவெல்லாம் வேஸ்டாயிடுத்தேம்மா”
அப்போது யாழினி குறுக்கிட்டாள். ``ஏண்டி பவானி,
அந்த கணேசனை லவ்பண்ணித்தானே கல்யாணம் பண்ணிண்டே? அது லவ் மேரேஜா இல்லை அரேஞ்சுடு மேரேஜா?”
சந்தேகமாக கேட்டாள் யாழினி.
``ரெண்டும்தான். லவ் அண்டு அரேஞ்சுடு மேரேஜ்தான். கல்யாணத்துக்கு முன்னால
அவன் நல்லாத்தான் இருந்தான். ரொம்ப ஸ்மார்ட்டா, கலகலனு பேசிண்டு, கைநிறைய சம்பாதிச்சுண்டுதான் இருந்தான். கொஞ்சம் கருப்புதான்,
இருந்தாலும் எனக்கு அவனைப் புடிச்சுது. அவன் என்னை
லவ் பண்ண கொஞ்சம் தயங்கத்தான் செஞ்சான்.
ஆனால் நான்தான் அவனை விரட்டி விரட்டி லவ் பண்ணினேன். மத்த எல்லோரும் என்னைப்பாத்து ஜொள்ளு
விட்டு சுத்தினப்போ இவன் என்கிட்டே பார்த்தும் பார்க்காததுபோல இருந்ததால அவனோட கேரக்ட்டர்
எனக்குப் புடிச்சுப்போச்சு.
அதனால அவனோட அம்மாவைப்போய்ப் பார்த்து
அவளையும் கவர்பண்ணி, அம்மா அப்பாட்டே சொல்லி கல்யாணம் பேசச்சொல்லி, கல்யாணமும்
நடந்து, ஒருவருஷமும் ஓடிப்போனதுக்கப்புறம்தான். அவன் எனக்கு அலுத்துப் போனான்.
அவனிட்டே குழந்தை பெத்துக்கறதையும் விரும்பாம ஏதேதோ சாக்குபோக்கு
சொல்லி தள்ளிப் போட்டுண்டே இருந்தேன்.
அதனால, என் மாமியாருக்கும் எனக்கும் வாக்குவாதம்
வந்தது. அவங்க பழங்கால
பழக்கத்துல ஊறினவங்க. அதனால, புருஷனுக்குத்தான் மரியாதையும் முதல் இடமும் எல்லாத்துக்கும்
குடுக்கணும்னு எதிர்பார்த்தாங்க.
``என்னோட ட்ரஸெல்லாம்கூட தோச்சுப்போடுவாங்க. ரொம்ப அன்பாத்தான் இருந்தாங்க. ஆனால், இந்த
அம்மாதான் அவங்களை என்னென்னமோ கேள்வியெல்லாம் கேட்டு அவமானப்படுத்திண்டே இருந்தா.
ஒரு கட்டத்துல நாங்க தனியா வர்ற மாதிரி ஆயிடுத்து. அவனும் நிறைய சம்பாதிக்கணும்னு ஆசைப்பட்டேன். என்னோட சம்பாத்தியத்துல, எனக்குத் தேவையானதை எல்லாமே வாங்கிக்குவேன். அவனுக்கோ மாமியாருக்கோ எதுவும் வாங்கிக்குடுக்கமாட்டேன். ஆனால், அவங்க
எனக்கு வாங்கிக்குடுக் கணும்னு எதிர்பார்ப்பேன். அவங்களும் வாங்கிக்குடுப்பாங்க.
``ஆனால், எனக்கு ஏனோ அவனோட வாழப்புடிக்கல்லை. அம்மாட்டேயும் அப்பாட்டேயும் சொன்னேன். அம்மாவுக்கும் என்னைப்போல,
மனசுதான். பெரிய பணக்காரியா ஆகணும்னு. அப்பா நிறையத்தான் சம்பாதிச்சுக்
குடுப்பாரு. எல்லாத்தையும்
அம்மா செலவு பண்ணிடுவா. கடன் வாங்கி வீடு ஒண்ணு வாங்கினா. அதுக்கு மாப்பிள்ளைய கடனடைக்கச் சொன்னா. அவனும் குடுத்தான். ஆனால் எங்கிட்டே ரொம்ப அன்பாத்தான்
இருந்தான். ஆசையாத்தான்
இருந்தான். ஆனால் நான்தான்
அவனை லட்சியம் பண்ணறதில்லை. ஏளனமாப்பேசுவேன். அவமானப்படுத்துவேன்.” என்று சொல்லி நிறுத்தியவளின் கண்களில்
நீர் கசிந்தது. குரல் தடுமாறியது.
யாழினி அவளைத்தொட்டு ஆறுதல் சொன்னாள். ``இப்போ ஏண்டி
கண் கலங்கறே? அவனைத்தான்
வேண்டாம்னு விவாகரத்து பண்ணிட்டயே. அப்புறம் ஏன் உணர்ச்சிவயப்படறே? நடந்தது நடந்துபோச்சு. மனசைத் தேத்திண்டு ஆகிற காரியத்தைப்பார்ப்பியா? ஒன்னை ரொம்ப தைரியசாலின்னுதான் நெனைச்சுண்டிருந்தேன். நீ இவ்வளவு கோழையா?” என்றாள்.
``நான் என்னவோ தைரியசாலிதாண்டி.
ஆனால் எனக்குள்ளே உறுத்திண்டிருக்கிற உணர்ச்சியும், அவனோட பழகின பாசமும் எனக்குள்ளே ஆறாத வடுவா இருக்குடி. அதனால வர்ற கண்ணீர்தாண்டி இது.
ஆனால், என்னோட அந்த டைவர்சுக்குக்காரணமே
அம்மாதாண்டி. எங்க ரெண்டு பேருக்குள்ளே சண்டை மூட்டி விட்டதும், அவனை பணம்பணம்னு பிடுங்கித் தின்னதும்
அம்மாதான். இப்போ என்னமோ
தனக்குஒண்ணுமே தெரியாதது போல பேசறா.
பாவம் அப்பா எவ்வளவோ புத்திமதியெல்லாம் எனக்கும் அம்மாவுக்கும்
சொல்லிப்பார்த்துட்டார். வெறுத்துப்போய் எப்படியாவது போங்கன்னு ஒதுங்கிட்டார். கொஞ்சநஞ்சம் பேசிண்டிருந்தவர்கூட
என்னோட ரெண்டாவது ஹஸ்பெண்டை விட்டுப்பிரிஞ்சப்புறம் பேசறதையே நிறுத்திண்டுட்டார்.”
என்று சொல்லி மேலும் கண்ணீர் உகுத்தாள் பவானி.
யாழினிக்கு மனதை என்னவோ செய்யவே, அந்த பேச்சுக்கு முற்றுப்
புள்ளி வைக்க எண்ணி, ``சரிடீ பவானி, பழசையெல்லாம்
பேசி ஏன் மனசைக் கெடுத்துக்கறே? வா, நாம வெளியில கொஞ்சம் ரிலாக்சா போயிட்டு வரலாம்.”
என்றவள் எழுந்தாள். அவர்கள் எழுந்து சென்றபின்னர்தான் நடேசன் சிற்றுண்டி அருந்த மேசையின் முன்
வந்து அமர்ந்து, அவருக்குத் தேவையானதைத் தானே எடுத்து வைத்துக்கொண்டு
சாப்பிடலானார்.
மங்களமும் மேசைமுன்வந்து அமர்ந்தவள் தானும் நான்கு இட்லியை வைத்துக்கொண்டு
ருசிக்கலானாள். தனது
ஒரே செல்ல மகளின் நிலை இப்படி பாழாய்ப்போய்க்கொண்டிருப்பதை நினைத்து உள்ளம் வருந்தினாலும்,
அவளுடைய மனதில் பேராசை மேலும்மேலும் கொழுந்துவிட்டு படரத்தான் செய்தது. தனக்கு முன்னால் அமர்ந்து அமைதியாக
சாப்பிட்டுக்கொண்டிருந்த நடேசனைப்பார்த்து பேசமுற்பட்டாள் மங்களம்.
``ஏங்க, இன்னிக்குத்தானே, ஏதோ ஒரு
பெரிய கல்யாணகாண்ட்ராக்ட் இருக்கறதா சொன்னீங்க. இன்னும் மூணு நாளைக்கு ஆத்துக்கு
வரமாட்டீங்க இல்லையா? எவ்வளவு காண்ட்ராக்ட் பேசினீங்க?
எல்லாம் லேபர் காண்ட்ராக்ட்தானே. எவ்வளவு
நமக்கு வரும்?” என்று கேட்டவளை ஏற இறங்கப் பார்த்தவருக்கு கோபம்
வரவில்லை, பரிதாபமும்
வருத்தமும்தான் ஏற்பட்டது.
``அந்த முதல் மாப்பிள்ளை கணேசன், இந்த ஆத்துக்கு வாங்கின
கடனையெல்லாம் அடைச்சுட்டான். ஆனால், அடுத்தாப்ல பக்கத்து வீட்ட வாங்கினோமே,
அந்த கடன் மென்னியப் புடிக்கறது. ரெண்டுமாசமா வட்டியும் அசலும் குடுக்கல்லை. பவானியும் ஒழுங்கா சம்பளத்தைக் குடுக்க
மாட்டேங்கறா. என்னோட
சம்பளம் ஆத்து செலவுக்கே சரியா ஆயிடறது. இப்போ ஒங்க சம்பாத்தியத்தத்தான்
நம்பிண்டிருக்கேன்.” மங்களம் சொல்லிவிட்டு நடேசனின் முகத்தைப்
பார்த்தாள். அதில் ஒன்றும்
அவளுக்குப் புலப்படவில்லை. கோபமோ வருத்தமோ எதையும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு ஏமாளியைப்போல முகத்தை வைத்திருந்தார்.
``என்னங்க, நான் பாட்டுக்கு கேட்டுண்டிருக்கேன்.
நீங்க என்னடான்னா பேசாம சாப்பிட்டுண்டே இருக்கேளே. பதில் சொல்லுங்கோன்னா, எவ்வளவு பணம் வரும்?” என்று மீண்டும் கேட்டாள்.
``ஒனக்கு எவ்வளவு வேணும்? அதச்சொல்லு” என்றார் நடேசன் நிமிர்ந்து பார்க்காமலே, இட்லியை விழுங்கியபடி.
``என்ன தெரியாதது மாதிரி புதுசா கேக்கறேள்? எவ்வளவு வருமோ அவ்வளவையும் குடுத்துடுங்கோ. அதுவே போதாது” என்றாள்.
``ஒனக்கு எவ்வளவு குடுத்தாலும் போதாதுதான். நான் நெருப்புல வெந்து ஆயிரம் ரெண்டாயிரம்பேருக்குன்னு
சமைச்சுப்போட்டு, பசி பட்டினி கிடந்து சம்பாதிச்சுண்டு வர்ற பணத்தை
கொஞ்சம்கூட ஈவு இரக்கமே இல்லாம வாங்கிண்டு உன்னோட இஷ்டம்போல செலவு செய்யறியே,
கொஞ்சமாவது என்னைப்பத்தி நினைச்சுப்பாத்தியா? எனக்குன்னு ஏதாவது நான் வாங்கிண்டிருக்கேனா,
இல்லை நீதான் வாங்கிக்குடுத்திருக்கியா?” மெல்ல
கேட்டார் நடேசன் பரிதாபமாக குரலை வைத்துக்கொண்டு.
``என்ன நீங்க புதுசா என்னவெல்லாமோ பேசறேள். நீங்க கஷ்ட்டப்பட்டு
சம்பாதிக்கறது எனக்குத் தெரியாதா என்ன?
நாம் எல்லாரும் சௌக்கியமா சந்தோஷமா வாழணும்னுதானே நான் புதுசா
வீடு வாங்கறேன். வாங்கினதை
பெருசா கட்டறேன். நானும்தான்
சத்துணவு டீச்சரா வேலை பார்க்கறேன்.
நான் மட்டும் அடுப்பில வேகலையா என்ன? கஷ்ட்டப்பட்டாத் தான்னா பின்னால சௌக்கியமா
வாழலாம். இப்போ சொல்லுங்கோ
எவ்வளவு சம்பாத்தியம் வரும்?” கொக்கரித்தாள் மங்களம்.
``ஒரு அம்பதாயிரம் வரும்”
``இல்லையே, ஒரு லட்சத்துக்கும் மேலேன்னா வரணும்.
ஏன்னா, ரெண்டாயிரம் பேருக்கு சாப்பாடு.
அதுவும் மூணுநாள் கல்யாணம். மொத்தமா ரெண்டுலட்ச
ரூபாய்க்குன்னா நீங்க காண்ட்ராக்ட் பேசியிருக்கணும். மத்த வேலைக்காராளுக்கெல்லாம் குடுத்தது
போக உங்களுக்கு எப்படியும்
ஒரு லட்சமாவது கைக்கு வராதா என்ன? இதுவரைக்கும் கரெக்டாத்தானே சொல்லிண்டிருந்தேள். இப்போ என்ன சம்பாத்தியத்தைக் குறைச்சு
சொல்லறேள்? என்ன துளிர்
விட்டுப்போச்சோ? இந்த
மங்களத்தை என்னன்னு நினைச்சேள். எங்கிட்டே எந்த ஏமாத்து வேலையும் நடக்காது. என்கைக்கு ஒரு லட்சம் வந்தாகணும். என்ன, புரிஞ்சுதா?”
கர்ஜித்தாள் மங்களம்.
``ஒரு லட்சம் வரும்னு நான்தானே
பத்துநாள் முன்னாடி சொன்னேன். இப்போ என்னமோ
தெரியாதது மாதிரி கேக்கறே? உன்னைக் கல்யாணம் பண்ணிண்டதிலேர்ந்து என்னிக்கு என்னோட சம்பாத்தியத்த மறைச்சிருக்கேன்.
எல்லாத்தையும்தான் உன்கிட்டே குடுத்துடுவேனே. குடுக்கல்லேன்னாதான் நீ சும்மா விடுவியோ. மெரட்டி புடிங்கிண்டுடுவியே.
நான் எக்கேடு கெட்டா ஒனக்கென்ன. நீ சௌக்கியமா ஆடம்பரமா
இருக்கணும்.” என்றவர் சாப்பிட்டு முடித்துவிட்டு கைகழுவச் சென்றார். மங்களம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தவள்
மெள்ள தனது வதனத்தில் புன்னகையை இழையவிட்டாள்.
பவானி, செல்லமாக வளர்ந்தபெண். நல்ல
பெண்ணாகத்தான் வளர்ந்தாள். நடேசனுக்கும், மங்களத்திற்கும் ஒரே மகளாக இருந்ததினால்
இருவரும் அவளை தங்கள் கண்ணுக்குள் வைத்துத்தான் வளர்த்துவந்தனர். மங்களம் தான் ஆடம்பரமாக உடுத்தவேண்டும், அணிகலன்கள் அணிய
வேண்டும், சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று நினைத்தாலும்,
தனது மகளுக்கும் அவ்வாறே செய்வாள்.
நடேசன் தனது சம்பாத்தியத்தில் முழுவதும் தனது மனைவியிடம் கொடுத்தாலும்,
தனக்கென்று கொஞ்சம் மிகுத்து வைத்திருப்பார். அதிலிருந்து
தனது செல்ல மகளுக்கு செலவுசெய்வார்.
பவானி விரும்பியதை வாங்கிக் கொடுப்பார். பல இடங்களுக்கும் செலவைப் பெரிதாக
நினைக்காமல் அழைத்துச்செல்வார். அதனால் வருத்தம் தெரியாமல் வளரப்பட்டாள் பவானி. தனது தாயுடன் அதிக நேரம் இருந்ததால்
மங்களத்தின் பழக்க வழக்கங்களும், எண்ணங்களும், பேராசை எண்ணமும் தான் ஒரு செல்வந்த சீமாட்டியாக வாழவேண்டும் எனும் நினைப்பும்
நெஞ்சில் ஊறி வெறியாகவே மாறிவிட்டது எனலாம். அதனால், எது
வாங்கிக்கொடுத்தாலும், அதில் திருப்தி அடையாமல் மேலும் மேலும்
பெரிதாக வேண்டும் எனும் மனப்பாங்கு வந்துவிட்டதில் வியப்பேதும் இல்லை. அதுவும் அவள் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன்
ஆசை எல்லை மீற ஆரம்பித்துவிடவே, அந்த ஆசைகளை தனது கணவன் மூலமாக
நிறைவேற்றிக்கொள்ள எண்ணமிட்டாள். வரும் கணவன், தனக்கு அடங்கியவனாகவும், நிறைய சம்பாதிப்பவனாகவும் இருக்கவேண்டுமென்று ஆசைப்பட்டாள். அதன் விளைவுதான் கணேசனைத் திருமணம்
செய்துகொண்டு விவாகரத்தானது.
இவையெல்லாவற்றையும்விட, தனது தாயார் தனது தந்தையின் வருமானத்தைமட்டும்
செலவு செய்யாமல், மேலும் வருமானம் தேடி சில செல்வந்தர் இல்லத்திலும்
வேலைசெய்யப்போய், அவரது
இச்சைக்கு ஆட்பட்டு பெருந்தொகையை சனமானமாகவும் பெற்று வந்ததையும் ஒரு சிலர் வாயிலாகக்
கேட்டுணர்ந்ததால், விவாகரத்து
என்பது மிகவும் சாதாரணமாக அவளுக்கு புலப்பட்டது என்பதை சொல்லவும் வேண்டுமோ.
இரண்டு
பவானியும் யாழினியும் வீட்டைவிட்டு
வெளிப்போந்தவர்கள், ஒரு ஆட்டோவைப்பிடித்து ஒரு பெரிய பூங்காவைத்தேடிச் சென்றனர். அந்தப்பூங்கா அவர்கள் எப்பொழுதும்
பொழுது போக்கும் இடமாக அமைந்திருந்தது.
இருவரும் தாங்கள் வழக்கமாக அமரும் இடத்திற்கு வந்து அமர்ந்து
கொண்டனர்.
``யாழினி என்னடி எங்கேயோ அவுட்டிங் போகலாம்னு சொல்லிட்டு இங்கே அழைச்சுண்டு வந்திருக்கே? நீ மூணு வருஷம் யு.கே.ல இருந்துட்டு இப்போதான் இந்தியா வந்திருக்கே. எனக்கு ஏதாவது வாங்கி வந்திருப்பாய்னு
பார்த்தா ஒண்ணுமே வாங்கிவரல்லே. இல்லை ஏதாவது என்மேல கோபமா?” யாழினியை சீண்டினாள் பவானி.
உடனே யாழினி நினைவு வந்தவளைப்போல, சட்டென்று தனது கைப்பையைத்திறந்து
ஒரு வாசனை திரவிய பாட்டிலையும், மற்றும் சில ஒப்பனைப் பொருள்களையும்
எடுத்து பவானியின் கைகளில் திணித்தாள்.
``ஓஓ. ஐ.யாம் சாரீடி. உங்க வீட்டுக்கு வந்தப்போவே குடுத்திருக்கணும்.
ஏதேதோ பேசிட்டே இருந்தோமா, சுத்தமா இதக்குடுக்க
மறந்தே போச்சுடி பவானி, மன்னிச்சுக்கோடி. நான் வந்து ஒருவாரம் ஆச்சா,
வாங்கிண்டுவந்த சாக்லெட்டெல்லாம் நமுத்துப்போச்சு. ஃபிரிட்ஜிலகூட வைக்க நேரமில்லாம ஆபீசுக்கு
ஓடிண்டிருந்துட்டேன். எல்லாத்தையும் தூக்கி குப்பையில போட்டுட்டேன். எப்படியாவது உன்னைப்பார்த்து பேசிட்டுப்
போகலாம்னுதான் வந்தேன். வந்த இடத்துல அனாவசியமா பேசி மூடு ஸ்பாயில் ஆனதுதான் மிச்சம்…ஹ்..ஹ்
..ம்..ம்..ம்.”
பெருமூச்சுவிட்டா யாழினி.
``அடிபோடி,.. நானே விதிய நொந்துண்டிருக்கேன். சும்மா உன்னை சீண்டிப்பார்த்தேன். என்மேல அன்பும் அக்கரையும் இருந்தாப்போதும்டி
யாழினி. இந்த பொருளெல்லாம்
குடுத்தாத்தான் சினேகமா? இதெல்லாம் இந்தியாவிலேயே அதுவும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலேயே கிடைக்கிறதே.
ஆனால், வாய்ப்பும் வசதியும் எந்த மார்க்கெட்டுலேடி
கிடைக்கும்? ஒருசமயம் நினைச்சுப்பார்த்தா, நான் உழைக்காமலே பெரிய பணக்காரி ஆகிடணும்னு பேராசைப்படறேனோன்னு தோணறதுடி யாழினி.”
பவானி சலித்துக்கொண்டாள்.
``ஏண்டி அப்படிச்சொல்லறே.; எல்லாமே எல்லாருக்கும் ஈஸியா கிடைச்சுடாதுடி. உன்னோட ஆம்பிஷன் பெரிய பணக்காரியாகணும்கறது. ஆனால் உன்னோட படிப்புக்கு ஏத்த வருமானம்தானேடி
கிடைக்கும். அப்படி இருக்கும்போது எந்த நைப்பாசைல பணக்காரியாகணும்னு
துடிக்கிறே? அதுசரி,
என்னமோ இரண்டாவது கல்யாணம் பண்ணிண்டமாதிரி வீட்டுல பேசிண்டிருந்தியே,
அது என்னடி, எனக்கு சுத்தமா ஒண்ணுமே தெரியாதுடி”
யாழினி அவள் வாயைப்பிடுங்கினாள்.
``ஓ..அதைச் சொல்றியா; அது ஒரு கதைடி. ஏதோ ஒரு வேகத்துல கணேஷை டைவர்ஸ் பண்ணிட்டாலும்,
அவனை என்னால மறக்க முடியல்லேடி. ஆனாலும், அம்மாவோட
நச்சரிப்பால அவனை மறக்க முயற்சிசெஞ்சிண்டிருந்த்ப்போதான், அந்த
பெரிய கோடீஸ்வரனொட ப்ரண்ட்ஷிப் கிடைச்சுது. அவன் பெயர் கண்ணன். பெயருக்கேத்தபடி காதல் லீலைகளில்
கைதேர்ந்தவன். அவனைச்சுற்றி
ஒரு பெண்கள் பட்டாளமே இருக்கும். எனக்கு அவன் சீனியர் மேனேஜரா பேங்களூரிலேர்ந்து வந்திருந்தான். அவன் என்கிட்டே ரொம்ப உரிமையா பேசுவான்.
எனக்கும் அவனை ரொம்பப் பிடிச்சுப்போனதாலே, அவனோட
சுத்தவாரம்பிச்சேன். அதனால கணேஷோட ஞாபகமே சுத்தமா வர்றதில்லை.
``போகப்போகத்தான் எனக்குத் தெரிஞ்சுது, அவன் ஒரு பெரிய
கோடீஸ்வரன்னு. ஊட்டிலயும்,
கொடைக்கானல்லேயும் ஏன், காஷ்மீர்லகூட எஸ்டேட்டுகள்
இருக்காம். ரொம்ப கேஷுவலா
சொல்லிப்பான். அப்பப்போ வெளியில் அழைச்சுண்டு போவான், போற இடமெல்லாம் ரொம்ப காஸ்ட்லியான
பெரிய பெரிய மாலாத்தான் இருக்கும்.
எப்போ எங்கே போனாலும், எனக்கு ஏதாவது காஸ்ட்லியா
வாங்கிக்குடுத்துண்டேதான் இருப்பான்.
என் வீட்டுக்கும் அவனை அழைச்சுண்டு போயிருக்கேன்.
``என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும்கூட ஏதாவது வாங்கிக் குடுப்பான். தட்டமுடியல்லை. கொஞ்சம் கொஞ்சமா என்னைத் தொட்டுப்பேச
ஆரம்பிச்சான். ஆனால்
அதெல்லாம் அப்போ இருந்த மனநிலைக்கு பெரிசாத் தோணல்லை. இதெல்லாம் கார்பொரேட் ஆபீசுல ரொம்ப
சகஜம்னு நானும் அவனோட ரொம்ப ஜாலியா பழகவாரம்பிச்சேன்.
``எங்களோட பழக்கம் ரொம்ப நெருக்கம் அதிகமாயிடுத்து. கல்யாணம் செய்துகொள்றியான்னு கேட்டார். அவரோட அப்பா அம்மாவெல்லாம் லண்டன்ல
இருக்கறதாகவும், என்னைக் கல்யாணம் செஞ்சுக்க அவங்க தடையா இருக்கமாட்டாங்கன்னும்,
சம்மதம் கொடுத்துட்டாங்கன்னும் சொன்னார். எங்க வீட்டிலேயும் வந்து பேசினார். அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். அப்பா எதுவும் பேசல்ல. கல்யாணத்தை வடபழனி கோவில்ல வெச்சு பண்ணிண்டோம். அம்மாவுக்கு பட்டுப்புடவையும்,
அப்பாவுக்கு பட்டு வேஷ்டி சட்டையும் வாங்கிக்கொடுத்தார். எனக்கு பட்டுப்புடவைமட்டும் இருபத்தஞ்ச்சாயிரம்
ரூபாயில வாங்கினார். அவரோட ஃப்ரண்ட்ஸ் நாலு அஞ்சுபேர் வந்திருந்தாங்க. கல்யாணம் ரொப சிம்பிளாத்தான் நடந்தது.
``அன்னிக்கு ராத்திரியே முதல்ராத்திரிய வெச்சுக்கணும்னு சொன்னார். எனக்கும் அவரிட்டே இருந்த மோகத்தினாலேயும், என்னை தங்க
நகைகளாலேயே குளிப்பாட்டியிருந்ததினாலேயும் நானும் சம்மதிச்சேன். அவரை முழுசா நம்பினேன். நான் அலங்காரம் பண்ணிண்டு தயாரா இருந்தேன். அம்மாகூட பக்கத்தில இல்லை.
வீட்டுக்குப்போயிட்டாங்க.
நான் ரொம்பநேரம் அறையில காத்திண்டிருந்துட்டு பொறுமையில்லாமல்,
கண்ணனைத்தேடிப்போனேன்.
மொட்டை மாடியில் அவரும் அவரோட நண்பர் ஒருவரும் குடிச்சுட்டு சந்தோஷமா
பேசிண்டிருந்தாங்க. எனக்கு
அவரைக்கூப்பிட தயக்கமாயிருந்ததாலே. மெதுவா படியேறிப்போனேன். அப்போ, அவங்க
பேசிண்டிருந்தது காதுல விழுந்தது. அதுவும் என்னைப்பத்தித்தான்னு தெரிஞ்சப்புறம் மறைவா ஒதுங்கிநின்னு கேட்டேன்.
``கண்ணா நீ ஏற்கனவே கல்யாணம் ஆனவன்னு பவானிக்குத் தெரியுமா அது தெரிஞ்சுமா அவ
உன்னைக்கல்யாணம் பண்ணிக்கிட்டா? உங்க அப்பா இதுக்கு சம்மதிச்சாரா என்ன? ஆனால் சும்மா சொல்லப்படாதுடா பவானி
ரொம்ப அழகுடா. அப்படியே
பார்வையாலேயே அசத்திப்புடறாடா. உன்பாடு ஜாலிதான் போ. அப்போ, பேங்களுர்ல
பொண்டாட்டி, இங்கே வைப்பாட்டியா? இன்னிக்கு
முதலிரவு இல்லே?” என்றான் அந்த நண்பன்.
``அடபோடா, எல்லாத்தையும் நம்பிட்டயா? அவளை இன்னிக்கு அனுபவிக்கமட்டும்தாண்டா
கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அத்தோட என்னை அவஜாதிக்காரன்னுவேற நினைச்சுக்கிட்டிருக்கா. அவ அம்மாவோ பணவெரி புடிச்சவ. அவளை பணத்தாலேயே அடிச்சுப்புட்டேன். இன்னிக்கு அந்தம்மாளையும் பேக்பண்னி
அவ வீட்டுக்கு அனுப்பிச்சுட்டேன். இப்போ கிளி எனக்காகக் காத்துக்கிட்டிருக்கும். அதுவும் எக்ச்பீரியன்ஸ் பிகர்டா.
ஏற்கனவே கல்யாணமாகி புருசனை விட்டுட்டு ஓடிவந்தவடா. அதையெல்லாம் கீப்பா வெச்சுக்கிட்டு
குடித்தனம் செய்யவெல்லாம் என்னால முடியாதுடா. இன்னிக்கு ராத்திரியோட கழட்டி வுட்டுடுவேனாக்கும். அதாவது ஐயா, ராத்திரி சோலி முடிஞ்சதும் மூணுநாலுமணிக்குள்ளே கிளம்பி அஞ்சுமணி பிளைட்டைப்
புடிச்சுடுவேனாக்கும். இனிமே லண்டன்லேதான் வேலை. ட்ரான்ஸ்பர் வாங்கிக்கிட்டோமில்ல.
கண்ணனா கொக்கான்னானாம். ……”
``கண்ணனோட இப்படிப்பட்ட பேச்சைக்கேட்ட எனக்கு தலையில இடி விழுந்ததைப் போல இருந்தது. தலை கிர்ர்ருன்னு சுத்தினாப்போல இருந்தது.
கொஞ்சநேரத்துல என்னை சுதாரிச்சுண்டுட்டு, மெதுவா
சத்தம்கேட்காதபடி கீழேவந்து என்னோட பொருளெல்லாத்தையும், அவன்போட்ட
நகைகளையும், அவன் பெட்டியில் வெச்சிருந்த அஞ்சு லட்சரூபாய் பணத்தையும்
எடுத்துண்டு வெளியில் வந்து டாக்சிபுடிச்சு என் வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டேன். அப்பாடி நல்லவேளை என்னோட கற்பு பறிபோகல்லைன்னு
கொஞ்சம் நிம்மதியா இருந்தது.” என்று அனைத்தையும் சொன்னவள் தனது
இரண்டு கைகளையும் குவித்து அதன் இடையே முகத்தைப் புதைத்துக்கொண்டு தேம்பினாள்.
சிரிதுநேரம் பவானி அழட்டும் என்று அமர்ந்திருந்த யாழினி, சற்று நேரம் கழித்து பவானியை மெதுவாகத்தொட்டாள். சட்டென்று தன்நிலைக்கு வந்தபவானி,
இரண்டுகைகளாலும் முகத்தைத் துடைத்துக்கொண்டவளாக, யாழினியைப் பார்த்து மெள்ள இளநகையை உதிரவிட்டாள். அதில் இயலாமை தெரிந்தது யாழினிக்கு.
``அப்புறம் அவன் உன்னைத்தேடி வரவேயில்லையா?”
``எப்படி வருவான், நான்தான் அவன் வீட்டிலேர்ந்து வெளியில்
வந்து டாக்சியில் ஏறறதை மாடியிலேர்ந்து எட்டிப்பார்த்துட்டானே. அவனுக்கு நான் அவனோட பேச்சைக் கேட்டுட்டேன்னு
புரிஞ்சிருக்கும். அப்புறம்
எப்படி வருவான்? அதுக்கப்புறம்
நான் அவனை ஆபீசுல பார்க்கவேயில்லை.
விஜாரிச்சதிலே, அவன் நிஜமாவே, லண்டனுக்குப் போயிட்டதா கேள்விப்பட்டேன். இதுல என்ன வேதனைன்னா, எனக்குக் கண்ணனோட கல்யாணம் பண்ணி அவனோட வாழாம ஆத்துக்கு வந்ததிலே, அம்மாவுக்கு வருத்தமேயில்லை.
சந்தோஷம்தான் இருந்தது. அதாவது தங்க நகைகளும், அஞ்சுலடசரூபாய் பணமும் கிடைச்சுதேங்கற சந்தோஷம்தான். அப்பா என்னைப்பார்த்து விரக்தியா
ஒரு சிரிப்பு சிரிச்சார், அவ்வளவுதான் அதுக்கப்புறம் அவர் என்னோட
பேசறதேயில்லைடி. தனியா உட்கார்ந்துண்டு எதையோ பரிகுடுத்தவர்போல
இருப்பார்டி.”.
``சரிடி, நடந்ததெல்லாம் நடந்துபோச்சு. இனிமேல் என்ன பண்ணப்போறே? உங்கம்மா என்னடான்னா வேரொரு கல்யாணம்
பண்ணி வைக்கணும்கறா; இன்னுமா உனக்கு பணத்தாசை இருக்கு?” யாழினியின் கேள்விக்கு
பவானியால் சட்டென்று பதில் சொல்ல இயலவில்லை.
``சொல்லுடி இன்னொரு கல்யாணமா பண்ணிக்கப்போறே?”
``இல்லேடி, அந்தத் தப்பை மறுபடியும் நான் பண்ணத்தயாராயில்லைடி.
ஆனால், நான் பெரிய கோடீஸ்வரியா ஆகணும்.”
``அப்படீன்னா, அதுக்கு ஒரு வழிதான் இருக்கு. அதாவது, நீ உன் அழகுக்கு, சினிமா
நடிகையா ஆகிடலாம்.”
சட்டென்று யாழினியைத் திரும்பிப்பார்த்தாள் பவானி. ``முடியுமாடி? நான் சினிமா நடிகையாகிடமுடியுமாடி?”
``ஏன் முடியாது? மனசு வைச்சால் மார்க்கமுண்டு. முயற்சி பண்ணனும்டி. உன்னோட அழகுக்கும் பர்சனாலிடிக்கும் சினிமாக்காரன் பார்த்தான்னா உன்னை கொத்திண்டு
போயிடுவான்”
பவானி கலகலவென நகைத்தாள். ``சினிமாக்காரனென்ன கழுகா,
நான் என்ன கிளியா கொத்திண்டு போறதுக்கு. ஆனால் சினிமாவுல நடிக்கப் போகணும்னா
பலபேரை அட்ஜஸ் பண்ணனுமாமே. அதெல்லாம் நம்மாலே முடியாது சாமி” கையெடுத்துக் கும்பிட்டாள்
பவானி.
``ஏங்க நீங்க சினிமாவுல நடிக்க வாரீங்களா? நான் சேர்த்து விடறேன். சரின்னு சொல்லுங்க. நம்ம கையில டைரக்டருங்க நிறையப்பேர் இருக்காங்க. நான் சொன்னாப்போதும்” என்று சொல்லியபடி அவர்களின் பின்னாலிருந்து ஒரு நடுத்தரவயது மனிதர் அவர்கள்முன்
நின்றார். நன்றாக உடுத்தியிருந்தார். கையில் ஒரு கைப்பை இருந்தது,
அதை கையிடுக்கில் வைத்திருந்தார். அவரது இரண்டு கைகளும் அவர்களை நோக்கிக்
குவிந்தன.
திடீரென இப்படியொரு மனிதர் தம்முன்னே தோன்றுவாரென்று அவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை. அந்த மனிதர் அவர்களையே பார்த்துக்கொண்டு
நின்றிருந்தார். அவரது
கண்கள் பவானியின் அழகை அணு அணுவாக ரசித்துக்கொண்டிருந்தன.
ஒருகணம்., ஒரே ஒருகணம்தான். தன்னை சுதாரித்துக்கொண்ட பவானி,
``யார்சார் நீங்க? இப்படி ரெண்டு லேடீஸ் தனியா பேசிக்கிட்டு இருக்கும்போதுவந்து குறுக்கிடறது
உங்களுக்கு அநாகரீகமாத் தெரியல்லை?” கோபமாகக் கேட்டாள் பவானி.
``அதானே; என்னசார்
போலீசைக் கூப்பிடட்டுமா? போங்கசார். ஆளைப்பாரு சினிமாவுல நடிக்க சான்ஸ் வாங்கித்தராறாம்.
போங்கசார், போங்க” என்றாள்
யாழினியும் தன்பங்கிற்கு.
``என்னைத் தப்பாப் புரிஞ்சிண்டிருக்கீங்க மேடம். இதப்பாருங்க” என்று தனது கைப்பையிலிருந்து ஒரு சீட்டை எடுத்துக் காண்பித்தார்.
``நான், சினிமாவிற்கு ஆள்சேர்க்கும் பீல்டு ஆபீசர்.”
என்றார் பணிவுடன்.
``அது என்ன பீல்டு ஆபீசர்? சினிமா புரோக்கர்ன்னு சொல்லுங்க”-
யாழினி.
``ஹிஹி.. அப்படியில்லீங்க.
நான் ரொம்ப உண்மையானவன். நேர்மையானவன்.
என்னை நீங்க நம்பலாம்.
உங்களுக்கு விருப்பமிருந்தால் இந்த அட்ரசுக்கு வந்து டைரக்டரைப்பாருங்க”
``உங்களை நம்பலாமா? எப்போ வரலாம்? நாளைக்கு எங்களுக்கு வேலை இருக்கு.
இன்னிக்குப் போகலாமா?” என்றவளை இன்முகத்துடன் வரவேற்று
வாடகைக்கார் ஒன்றைப்பிடித்து அவர்களுடன் சென்றார் அந்த சினிமா பீல்டு ஆபீசர். அரைமணி நேரத்தில் அந்த கார் கோடம்பாக்கத்தில்
இருக்கும் ஒரு சினிமா ஸ்டுடியோவினுள் நுழைந்து உள்ளே ஒரு கட்டிடத்தின் முன்னர் போய்
நின்றது.
அதிலிருந்து இறங்கிய அந்த நபர், ``வாங்க” என்று அழைத்தபடி அந்த கட்டிடத்தினுள் நுழைந்தார். உள்ளே சென்றதும் இருக்கைகளைக்காட்டி
அதில் இருவரையும் அமரச்சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
``என்னடியிது, நாம் சும்மா பேசிக்கிட்டிருந்தோம். திடீர்ன்னு இப்படி ஒரு சம்பவம் நடக்கும்னு
எதிர்பார்க்கவேயில்லையேடி யாழினி” என்றாள் பவானி சுற்றுமுற்றும்
தனது பார்வையை ஓடவிட்டவளாக.
``ஆமாண்டி. எனக்கும் ஒண்ணும் புரியல்லை. சினிமாவுல சேர்றதுக்கு எத்தனையோபேர்
தவம் கிடக்குறாங்க. அவங்களையெல்லாம்
விட்டுட்டு, முன்னேபின்னே தெரியாத நம்மளை எப்படிடீ சேர்த்துப்பாங்க?
கண்ணைக்கட்டி காட்டுல விட்டமாதிரி இல்லே” என்ற
யாழினியின் கேள்விக்குப் பதில்சொல்வதைப்போல, உள்ளேசென்ற அந்த
மனிதர் திரும்பி வந்தார் சிரித்த முகத்துடன். ``உங்களை டைரக்டர் கூப்பிடறார்.
போங்க உள்ளே. பயப்படாதீங்க. டைரக்டர் ரொம்ப நல்லவர். நம்பிக்கையானவர். உங்களைப்போல புதுமுகங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கார்.” என்றவர், அவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்
உள்ளே, ஒரு பெரிய மேசைக்குப்பின்னால் ஒரு பெரிய நார்காலியில்,
ஒரு மெலிந்த உருவம் அமர்ந்திருந்தது. அவர்களைக் கண்டதும் முகத்தில் எந்தவித
உணர்ச்சியும் இன்றி வாருங்கள் என்று வரவேற்று, அமரச்சொல்லி இருக்கைகளைச்
சுட்டியது. பிறகு, அவர்களை கூர்ந்து நோக்கியவாறு,
``என்பெயர் கடோத்கஜன்.
கேள்விப்பட்டிருப்பீங்களே. இதுவரையில் நூற்றுக்கும்
மேற்பட்ட படங்களை உருவாக்கியிருக்கிறேன். என்ன பார்க்கறீங்க;
பெயருக்கும் உருவத்துக்கும் சம்பந்தமில்லைன்னா; சரி, உங்களைப்பற்றி
சொல்லுக்கள். “ என்றபடி சாய்ந்து அமர்ந்து கொண்டார் டைரக்டர்
கடோத்கஜன்.
யாழினியால் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியாமல் திண்டாடினாள். ஒருவாறு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்ட யாழினிதான் முதலில் தன்னைப்பற்றி கூறலானாள்.
அவள் கூறி முடித்ததும், பளிச்சென்று தன்னைப்பற்றிச் சொன்னாள்
பவானியும். தாங்கள் .பெரியதொரு கார்பொரேட் கம்பெனியில் பணியாற்றுவதாகவும், சினிமாவில் நடிப்பதைப்பற்றி தங்களுக்கு எந்தவிதமான எண்ணமும் இல்லையென்றும், பூங்காவில் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்டு அந்த
நபர் அவர்களைக் கட்டாயப்படுத்தி இங்கே அழைத்து வந்துவிட்டதாகவும் கூறினாள். மேலும் தாங்கள் மிகவும் கவுரவமாக
வாழ ஆசைப்படுவதாகவும், மிகுந்த செல்வம் சேர்க்க ஆசைகொண்டிருப்பதாகவும், சினிமாத்தொழிலுக்கு வந்தால் பலவிதமான
நபர்களின் ஆசைக்கு இணங்கவேண்டியிருக்குமென்று கேள்விப்பட்டிருப்பதாகவும், மேலும் தனக்குத் தோன்றியவற்றையெல்லாம் கடகடவென்று ஒப்புவிப்பதுபோல் சொல்லி
முடித்தாள்.
அவர்கள் அப்பாவித்தனமாக பேசுவதையே சிரித்த முகத்துடன் கவனித்துக் கொண்டிருந்த
கடோத்கஜன், கடகடவென்று வாய்விட்டுச் சிரித்தார். பின்னர், ``அம்மா,.. நீங்க இப்போ எந்த உலகத்துல இருக்கீங்க;
ஆண்பெண் தொட்டுப்பேசுவது ரொம்பரொம்ப சகஜம்மா. கார்பொரேட் ஆபீசுல வேலை செய்யறதாச்
சொல்லுறீங்க, அங்கேதானே இதெல்லாம் ரொம்ப சகஜமா நடக்கிறதுன்னு
பேசிக்கிறாங்க. நீங்க
என்னமோ, சினிமா உலகத்தை குறை சொல்லறீங்க. இங்கே, யாரையும்
யாருடைய இச்சைகளுக்கும் இணங்கணும்னு அவசியமில்லைம்மா.
``சினிமாவுல நடிக்கணும்னு வந்துட்டா, முதல்ல மேக்கப்மேன்
உங்களைத் தொட்டுத்தான் மேக்கப் போடுவார்.
அவர் அங்கே தொடறார் இங்கே தொடறார்ன்னெல்லாம் நினைக்கப்படாது. அடுத்ததா டைரக்டராகிய நான்,
உங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும்போது தொட்டுத்தொட்டுத்தான் சொல்லிக்கொடுக்க
வெண்டியிருக்கும். அதையும்
தப்பா எடுத்துக்க வேண்டாம். ஆனால், கூட நடிக்கும் நடிகர்கள் உங்களைத் தொட்டுத்தொட்டுத்தான்
நடிக்கவேண்டியிருக்கும். கூடுதலாக, அவர்களைக் கட்டிப்பிடித்து உருண்டுபுரண்டு
காதல்செய்வதாகவும் நடிக்க வேண்டியிருக்கும். இதற்கெல்லாம் சம்மதம்னா
நடிக்கவாங்க. நீங்க ரெண்டு பேரும் நடிக்க சரியா வருவீங்கன்னு
நான் நம்பறேன்.”
இவையனைத்தையும் செவிமடுத்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
பின்னர், பவானிதான் பேசினாள், ``இதெல்லாம் தொழிலில் தவிர்க்கமுடியாததுன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும் சார்.
நடிகரோட கட்டிப்புரள்வதைப்போல நடிக்கத்தானே வேண்டும். அதெல்லாம் ஓகேதான். ஆனால் எங்கள் கற்புக்கு பங்கம் வந்துவிடுமோன்னுதான்
பயப்படறோம்.” என்றாள்.
``அப்படியெல்லாம் எடுத்த எடுப்பில யாரும் உங்கமேல கையை வெச்சுடமாட்டாங்க.
அதுக்கு நான் கேரண்டி.
ஆனால், ஓரிரு படம் நடிச்சதுக்கு அப்புறமா,
சான்ஸ் வேணும்னு நீங்களே அனுசரிச்சு நடக்க வேண்டிவந்தா, அதுக்கு நான் பொறுப்பேத்துக்கமுடியாது. சத்தியமா என்னால உங்களுக்கு எந்த
தொந்திரவும் இருக்காது. இது போதுமா?” என்றார் புன்னகை மாறாமலே கடோத்கஜன்.
பின்னர், இருவரும் தனியே கலந்து பேசுவதாகச் சொல்லிவிட்டு
வெளியில் வந்து கலந்து பேசினர். பின்னர், நடித்தும்தான் பார்த்துவிடுவோமே எனும் நைப்பாசைக்கு
இடம்கொடுத்தனர். மேலும்
சினிமாவில் நடித்தால் கோடிகோடியாக சம்பாதிக்கலாம் என்றும் முடிவு செய்து டைரக்டரிடம்வந்து
தங்கள் ஒப்புதலைத் தெரிவித்தனர். பின்னர், கடோத்கஜன், அவர்களை மேக்கப் டெஸ்ட்டுக்கு அழைத்துச் செல்லச்சொன்னார். அந்த ஒப்பனைத் தேர்விலும் அவர்கள்
தேர்ச்சி பெர்றனர். பின்னர், ஒரு தாளைக்கொடுத்து
படிக்கச் சொன்னார். ஏற்ற
இறக்கங்களுடன் படிக்கச்சொன்னார். சில முக அசைவுகளை கேமராவில் படம்பிடிக்கச்சொன்னார். இப்படியாக அனைத்து சோதனைகளும் முடிய
ஒன்றரை மணிநேரம் பிடித்தது. இறுதியில் இருவரையுமே, டைரக்டர், அவரது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துகொண்டார். முற்றிலும் புதுமுகங்களையே வைத்து
எடுக்கும் படமாதலால், இருவரையும் அந்தப் படத்தில் கதாநாயகிகளாகத்
தேர்வுசெய்தார். ஆயினும்,
முதன்மை கதாநாயகி பவானிதான்.
இருவரிடமும் ஒப்பந்தத்தில் கையொப்பம் வாங்கிக்கொண்டார். அவர்களது வீட்டுவிலாசத்தையும் பெற்றுக்கொண்டவர், அவர்களது
வங்கிக் கணக்கில் ஒவ்வொருவருக்கும் ஐந்துலட்சரூபாய் கணினிமூலம் அனுப்பி வைத்தார்.
பின்னர், தனது காரிலேயே இருவரையும் அவரவர் இல்லத்தில்
சேர்ப்பிக்கச்சொன்னார்.
இன்னொன்றையும் சொல்லித்தான் அனுப்பினார். அதாவது அவரிடம்
ஒப்பந்தம் செய்துகொண்ட நாட்களில் வந்து நடித்துக்கொடுத்துவிட்டுப் போகவேண்டுமென்றும்,
தன்னை ஏமாற்ற நினைத்தால் பின்விளைவுகள் மிகமிக மோசமாக இருக்குமென்றும்
சொன்னார். அந்தப்படத்தில்
நடிக்க அவர்களுக்கு தலா ஐம்பது லட்சம்ரூபாய் தருவதாகவும் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
படத்தை மிகவும் குறுகிய காலமான மூன்று மாதங்களில் முடித்துவிடுவதாகவும்
கூறினார். பின்னர் இருவரும்
தத்தம் இல்லங்களில் விடப்பட்டனர்..
மூன்று
கணேசனும் அவனது தாயார் நளினியும் அவர்களது
இல்லத்தில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தனர். கணேசன் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தான்.
அவன் அருகில் நளினி அமர்ந்து கண்ணீர் விட்டுப் பேசிக்கொண்டிருந்தாள்.
``என்னடா கணேசா, இப்படியே எத்தனை நாளைக்குத்தான் ஒண்டிக்
கட்டையா இருக்கப்போறே? எனக்கும் உடம்புக்கு முடியல்லைடா.
வயசோ அறுபதைத் தொட்டிண்டிருக்கு. உங்கப்பா இருந்திருந்தா இப்படியெல்லாம்
நடக்க விட்டிருப்பாரா; வேறவொரு நல்ல பொண்ணாப்பார்த்து கல்யாணம் பண்ணிவைக்கறேண்டா. சம்மதம்னு நீ சொன்னாப்போதும்டா.” என்று கண்ணீர் மல்க
கெஞ்சிக்கொண்டிருந்தாள்.
``அம்மா, அம்மா நீ எத்தனை பொண்ணைப் பார்த்தாலும் அவங்களெல்லாம்
இவளைப்போல இருக்கமாட்டாங்கறது என்ன நிச்சயம்? இந்த காலத்துப்
பொண்ணுங்களெல்லாம் யாரையும் மதிக்க மாட்டாங்கம்மா. ஏன்னா அவங்களுக்கு
ஆசை அதிகம். அத்தோட அகம்பாவமும் அதிகம். அதனால நீ எந்தப்பொண்ணைப் பார்த்தாலும் அவளும் உனக்கோ, இல்லை எனக்கோ அன்போட பாசத்தோட அனுசரணையா இருப்பான்னு சொல்ல முடியாதும்மா. அதனால நீஇந்த பேச்சை விட்டுடு”
என்றான் கணேசன் அலுப்புடன்.
சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது. கணேசன்தான் அழுகுரலில் புலம்பினான். ``அம்மா, பவானி
நல்லவளம்மா. அவ அம்மாதான்
ரொம்ப பணத்தாசை புடிச்சவ. என்னை எப்படியெல்லாம் அவமானப் படுத்தினா தெரியுமா; எங்கெல்லாமோ என்னை கடன்வாங்க வெச்சா.
அதுக்கு வேற வழியில்லாம அம்மா சொல்றதுதான் சரின்னு நம்பி பவானியும் என்னை
மோசமா நடத்தினாளேதவிர, அவளா தெரிஞ்சு எதுவும் செய்யல்லேம்மா.
அவ ரொம்ப நல்லவள்மா.”
``நல்லவள்தான், உனக்கு விவாகரத்து குடுத்துட்டுப்போயிட்டாளோ.
எல்லாருமே ப்ராடு. சுத்த பிராடு குடும்பம்டா கணேசா.
உன்னை விவாக ரத்துபண்ணி ரெண்டு வருஷமாகியும் நீ அவளை நினைச்சு
நினைச்சு உருகறே. ஆனா
அவ ஜாலியா இன்னொரு கல்யாணம் பண்ணிண்டு அவனிட்டேயும் காசைப்பிடிங்கிண்டுட்டு,
அவனையும் விட்டுட்டு, இப்போ சினிமாவில நடிக்கறா. சினிமாவுல நடிக்கறவ உறுப்பட்டாப்பலதான். பணம் பணம்னு அலையறதுகள். மானத்தை விட்டு யார்யாரோடயெல்லாமோ
கட்டிப்புறண்டு நடிச்சு, தூ.தூ.
கேவலமான பொழப்பு. இப்படியெல்லாம் சம்பாதிச்சு என்ன பண்ணப்போறா. தேவடியாப் பொழப்புதான். கண்டவனோட கட்டிப்புடிச்சுண்டு,
சேச்சே.. இதுவெல்லாம் ஒரு பொழப்பா?” வெறுப்புடன் பேசினாள் நளினி.
``அதெல்லாம் நடிப்புதாம்மா. கட்டிப்புறண்டு நடிக்கறதால அவளோட கற்பு போயிடுமா அம்மா. ஆம்பளைங்களோட பழகறதையே தப்பாப்பேசினது அந்தக்காலம். இப்போல்லாம். கார்பொரேட் ஆபீசுல ஆணை பொண்ணுங்க
கட்டிக்கறதும், பொண்ணை ஆணுங்க கட்டிக்கறதும் கைகோத்துண்டு வெளியில
சுத்தறதும் ரொம்ப சகஜம்மா. இதுநாலெல்லாம் கற்பு போயிடாது. அப்படித்தான் பவானியும்
இருப்பாம்மா. நீ வேணுமானா
பாரேன், பவானி என்னிக்காவது ஒருநாள் தான்செஞ்சது தப்புன்னு சொல்லி
இங்கேவந்து உன்னோட கால்ல விழறாளா இல்லையா பாரு. எனக்கு நம்பிக்கை இருக்கு.”
என்றான் கணேசன் ஆணித்தரமாக.
அவனைப்பார்த்து அழுவதா சிரிப்பதா என்பதே புரியாமல் திக்பிரமை பிடித்தவளைப்போல
அமர்ந்திருந்தாள் நளினி. அப்பொழுது வாயிலில் நிழலாடுவதை உணர்ந்த கணேசன், ``யாரது
வாசல்லே. யாராயிருந்தாலும்
உள்ளே வரலாம். உள்ளே
வாங்கோ’ என்று உரத்த குரலெழுப்ப, தயங்கித்
தயங்கி நடந்தபடி உள்ளே வந்தார் நடேசன்.
அவரைக் கண்டவுடன் சட்டென்று எழுந்த கணேசன், மலர்ந்த முகத்துடன்
``வாங்கோ மாமா, வாங்கோ. இப்படி உட்காருங்கோ. அம்மா, மாமா
வந்திருக்கார்பாரு, அவருக்கு குடிக்க ஏதாவது எடுத்துண்டுவா”
என்று குரல் கொடுத்தவன் நடேசன் அமர்ந்தபின்தான் அவனும் அமர்ந்துகொண்டான்.
``மாப்பிள்ளை, எப்படி இருக்கேள், சௌக்கியம்தானே. ஏன் முகமெல்லாம் வாடிப்போயிருக்கு? அழுதேளா? எதுக்கு அழணும், நாங்கன்னா அழணும்.” என்றவர் கண்ணைத் துடைத்துக்கொண்டார்.
``சொல்லுங்கோமாமா, மாமி எப்படியிருக்கா, பவானி எப்படி இருக்கா? அவள் சினிமாவிலேல்லாம் நடிக்கறாள்னு
நினைக்கிறேன். பெரிய
பணக்காரி ஆகணும்னா சினிமாவுல நடிச்சாத்தான் ஆகலாம். ஆனால் மானத்தோட
வாழ முடியாது. இப்போல்லாம்
யார் மானம் மரியாதையெல்லாம் பார்க்கறா; பணம் இருந்தாப்போதுமே
மானம் மரியாதையெல்லாம் தானே தேடிவந்துடுமே. ம்..ம்.
அதெல்லாம் அவாவா சௌகரியம். விருப்பம். நம்ம சொந்தமில்லைன்னு ஆனதுக்கப்புறம் அவா எப்படிப்போனா என்ன? நான் ஏன் கவலைப்படணும். சரி, நான் ஏதோ என் ஆற்றாமையைப் பேசினேன். நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்காதீங்கோ. நீங்க வந்த விஷயத்தைச் சொல்லுங்கோ.
நான் ஏதாவது செய்யணுமா?” என்றான் உணர்ச்சியில்லாமலே.
``மாப்பிள்ளே, உங்களை வந்து பார்த்துப்பேசணும்னு பலதடவை
நினைப்பேன்,ஆனால் ஏதோ தடுத்துடறது. என்பொண்ணை நீங்க வேண்டாம்னு சொல்லல்லியே,
அவதானே உங்களை வேண்டாம்னு சொல்லி டைவர்சும் வாங்கிண்டா. இதுக்கெல்லாம் காரணம் என்னோட பொண்டாட்டிதான்
மாப்பிள்ளை. அவளுக்கு
எப்படியாவது கோடீஸ்வரியா ஆகணும்னு பேராசை.
நாம உழைக்காம எப்படி கோடீஸ்வராளாகமுடியும்? அதெல்லாம் அந்த ஜென்மத்துக்குப் புரியமாட்டேங்கறது. இப்போ, தன்னோட
பொண்ணு வாழ்க்கையை இழந்து தனிமரமா எதுலேயுமே பிடிப்பே இல்லாம என்ன செய்யலாம் ஏது செய்யலாம்,
எதை செஞ்சா பணக்காரியாகலாம்னு தன்னைப்போலவே தவிச்சுண்டு நிக்கறாளேன்னு
கவலைப்படறா மாப்பிள்ளை. கண்கெட்டபின்னாடி சூரிய நமஸ்காரம் செஞ்சா கண்ணு வந்துடுமா என்ன? தன்னோட பொண்ணாச்சே, அவள் வாழ்க்கை கெட்டுப் போயிடுமேன்னு
நினைக்காமல், அவளுக்கு தூபம்போட்டு, தூபம்போட்டு,
அவளை இந்த நிலைக்குக் கொண்டு வந்துட்டா. இதெல்லாம் நான் சொல்லித்தான் உங்களுக்குத்
தெரியணும்னு இல்லை. நீங்க அவாளிட்டே இருந்துண்டு அனுபவிச்சதுதானே. ஏன், நானே இத்தனை
வருஷமா அனுபவிச்சுண்டுதான் இருக்கேன்.
ஆனால் என்னை டைவர்ஸ் பண்ணல்லை.” கொஞ்சம் மூச்சுவிட்டு நிறுத்தினார்
நடேசன்.
``சரிமாமா, அதுக்கென்ன இப்போ? ஏன்முடிஞ்சுபோன கதையை மறுபடியும்
கிளரறேள்? வந்த விஷயத்தைச்
சொல்லுங்கோ.” நடுவில் நளினி குறுக்கிட்டுப்பேசினாள்.
``மாமி அப்படியில்லை. ஏதோ என் மனசுல பட்டதைக் கொட்டறேன்.
ஆனால், உங்களிட்டே நான் பிச்சைகேட்டு வந்திருக்கேன். அதாவது என் பெண்ணுக்கு வாழ்க்கைப்பிச்சை. மங்களமும் வந்திருக்கா, வாசல்லேயே நின்னுண்டு இருக்கா.
உள்ளே வந்தா நீங்க அவளை உள்ளே விடுவேளோ இல்லை வைவேளோன்னு அச்சப்பட்டுண்டு
இருக்கா.”
``அப்படியா? ஏன்
வாசல்லேயே நிக்கணும்; நாங்க ஒண்ணும் ஒங்களையெல்லாம் வாண்டாம்னு சொல்லல்லியே; மாமிதானே என்னை ரொம்ப மரியாதைக் குறைவா
பேசினா, நடத்தினா.
ஆனாலும் நாங்க அதையெல்லாம் மனசுல வெச்சுண்டு, வீடுதேடி வர்றவாளை வராதேன்னு சொல்லமாட்டோம். மாமியை உள்ளே வரச்சொல்லுங்கோ. மாமி, மாமி,
ஏன் வெளியிலே நிக்கறேள், உள்ளே வாங்கோ.”
என்று குரல் கொடுத்தாள் நளினி.
``தயங்கித்தயங்கி உள்ளே வந்த மங்களம், நேராக ஓடிவந்து,
நளினியின் கால்களில் விழுந்து கதறினாள். ``மாமி,
நான் தப்பு செஞ்சுட்டேன்.
ஆதிமுதலா நான் கஷ்டத்துலேயே பிறந்து கஷ்டத்துலேயே வளர்ந்து,
கஷ்டத்துக்கே வாழ்க்கைப்பட்டதாலே, பணக்காரியா வாழணும்னு ஆசைப்பட்டேன். எனக்கு பிள்ளையில்லாமல், ஒரே பொண்ணுதான் பொறந்ததாலே,
அவளைவெச்சே, பணக்காரியாகிடலாம்னு நினைச்சேன். உங்க பிள்ளையைக் காதலிக்கிறதா என்கிட்டே
சொன்னப்பவே, நான், ஒரு பணக்காரனாப்பார்க்கறதுதானேன்னு
சொல்லியிருக்கேன். ஆனால்
அவள் மாப்பிள்ளைமேலேதான் ஆசைப்பட்டிருக்கா. அவரும் அவரோட புத்திசாலித் தனத்தாலே,
சீக்கிரமா முன்னுக்கு வந்துடுவார், நாமும் பணக்காராளா
வாழலாம்னு சொன்னா. பணக்காராளா
இருக்கணும்னா, திடீர்ன்னு சும்மா உழைக்காம ஆகிடமுடியுமாங்கறதெல்லாம்
எனக்குத்தெரியாது. என்
ஆத்துக்காரரும் நிறையத்தான் சம்பாதிச்சார், சம்பாதிக்கறார். அதையெல்லாம் வெச்சுண்டு சிக்கனமா
வாழ்ந்திருந்தேன்னா, நானும் பணக்காரியா இருந்திருக்கலாம். ஆனால் பெருமைக்கு ஆசைப்பட்டு ஆடம்பரமா
வாழறதா நினைச்சுண்டு அனாவசியமா செலவு செஞ்சு, கடன் வாங்கி வீடுவாங்கின்னு
எதையுமே என்னிஷ்டம்போல செலவுசெஞ்சு, மாப்பிள்ளையையும் பொண்ணையும் கடன்காராளாக்கினதுதான் மிச்சம்.
``சிக்கனமா வாழ்ந்திண்டிருக்கிற உங்களைப்போய் தகாத வார்த்தையெல்லாம் பேசி அவமானப்படுத்தி,
உங்களுக்குன்னு இருக்கிற ஒரே பிள்ளையை உங்ககிட்டேர்ந்து பிரிச்சு…
அவரையும் கடன்காரராக்கி, ஒண்ணுமே இல்லாத ஓட்டாண்டியா
தெருவில விட்டமாதிரி விட்டுட்டோமே அதையெல்லாம் இப்போ நினைச்சுத்தான் கண்ணீர்விட்டு
கதறறேன் மாமி. பேராசைங்கிற கானல்நீரை நோக்கியே பயணிச்சுண்டிருந்த
எனக்கு, இப்போ பவானி, என்ன பண்ணறதுன்னே
தெரியாம தவிச்சுண்டு நிக்கறதைப் பார்த்தா பெத்த வயித்தை என்னமோ பண்ணறதுமாமி. எல்லாம் என்னோட கானல்நீர் கோடீஸ்வர
ஆசை. அதுக்கு என்பொண்ணையும்
பலியாக்கிட்டேனே. அவள்
வாழ்க்கையையும் சீரழிச்சுட்டேனே. நான் மஹாபாவி..மஹாபாவி..” என்று
சொலி தனது தலையில் அடித்துக்கொண்டாள் மங்களம்.
நளினிக்கும், கணேசனுக்கும் என்னசெய்வதென்றே புரியவில்லை.
இவர்கள் என்ன சொல்ல நினைக்கிறார்கள், ஏன் இப்போது
இதையெல்லாம் சொல்கிறார்கள் என்பதெல்லாம் புதிராகவே இருந்தது.
``சரிமாமி, நாங்க இப்போ என்ன பண்ணனும் சொல்லுங்கோ”
``என் பொண்ணுக்கு வாழ்வு குடுக்கணும். அவளை மன்னிச்சு ஏத்துக்கணும்”
அழுதுகொண்டே, தனது மடித்தலைப்பைப் பிரித்து யாசகம்
கேட்பதைப்போல் கேட்டாள் மங்களம்.
``உங்க பொண்ணுக்குத்தான் கணேஷைப் புடிக்கல்லையே. இவனோட வாழணும்னு அவதானே பிரியப்படணும்.
கேட்கணும், நீங்க ரெண்டுபேரும் வந்து எங்ககிட்டே
கேட்டா நாங்க என்ன பண்ணமுடியும். அத்தோட இவா ரெண்டுபேரும் டைவர் பண்ணினவா. அப்படி இருக்கும்போது, நாங்க எப்படி அவளுக்கு வாழ்க்கை குடுக்கமுடியும். வாழும்போது ரொம்ப திமிரா நடந்துண்டவ,
மறுபடியும் அப்படி நடந்துக்கமாட்டாங்கறது என்ன நிச்சயம்?” நளினி பொறுமையுடன் வார்த்தைகளை உதிர்த்தாள்.
``அவள் இப்போ எல்லாத்தையும் உணர்ந்துட்டா மாமி. திருந்திட்டா”
``சரி, திருந்தட்டும் நல்லதுதானே. வேற யாராவது நல்ல பணக்கார மாப்பிள்ளையா
கிடைச்சா பார்க்கவேண்டியதுதானே. இப்போ ஏன் இங்கேவந்து ரெண்டுபேரும் புலம்பிண்டிருக்கேள்? உங்க பொண்ணு என்னடான்னா, எவனெவன்கூடவோ ஊர்சுத்திண்டிருக்கா. பணக்காரன் ஒருத்தனை ஏமாத்தி பணம்பறிச்சிண்டிருக்கா. கோடீஸ்வரி ஆகணும்னு சினிமாவுலகூட
நடிக்கறா. அப்படி இருக்கும்போது
குடும்ப மானத்தை கப்பலேத்தின ஒருத்திக்கு நாங்க எப்படி வாழ்வு கொடுப்போம்னு நீங்க எதிர்
பார்க்கறீங்க? இப்போதான்
நான் கொஞ்சம் கொஞ்சமாப்பேசி, புள்ளையாண்டான் மனசை மாத்தி இன்னொரு
கல்யாணம் பண்ணிக் ?கோடான்னு மன்னாடிண்டிருக்கேன். அவனும், கதலிச்சுக்
கல்யாணம் பண்ணிண்ட உங்க பொண்ணை நினைச்சே அழுதுண்டும், வருத்தப்
பட்டுண்டுமிருக்கான். இப்போவந்து அதையும் கெடுக்க நினைக்கிறேளே. உங்களுக்கே இதெல்லாம் நியாயமா படறதா
சொல்லுங்கோ?” கொஞ்சம் ஆக்ரோஷமாகவே பேசினாள் நளினி.
``இல்லைமாமி, இனிமேல்
அவள் சினிமாவுல நடிக்கமாட்டாள். அரை மனசோடதான் சினிமாவுல நடிக்க
ஒத்துண்டாள். அதுவும்
அவளோட சினேகிதி யாழினியினாலதான். இப்போ யாழினி சினிமாவுல ரண்டுமூணு படத்துல நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்காளாம். ஆனால் பவானிக்கு சினிமாவுல நடிக்கவே
பிடிக்கவில்லையாம். குடும்பவாழ்க்கையே
போதும்னு நினைக்கிறாள் மாமி”
``சரி, எங்களுக்கொண்ணும் ஆட்சேபணை இல்லை. வேற நல்ல பணக்கார மாப்பிள்ளையா பாருங்கோ.”
``என்ன இப்படி சொல்றேள்? உங்க பிள்ளையோடத்தான் வாழணும்னு சொல்லிண்டிருக்கா.”
``இதென்ன, அடம்புடிச்சு வாங்கிக்கற விவகாரமா இல்லை இந்த
சாக்லெட் வேண்டாம் அந்த சாக்லெட்டுதான் வேணும்னு சொல்லிட்டு மறுபடியும் இந்த சாக்லெட்டேதான்
வேணும்னு அடம்பிடிக்கிற குழந்தைத் தனமா?
நீங்களும்சரி, உங்க பொண்ணும்சரி,
மாறவே மாட்டேள் மாமி. எனக்கு என்னமோ நீங்க நினைக்கறது
சரியாப்படல்லை”
``என்னமாமியிது, இவ்வளவு தூரம் சொல்லி இறங்கி வரோமே,
கொஞ்சம் தயவு காட்டமாட்டேளா?” கெஞ்சினாள் மங்களம்.
``என்ன சொல்றேள்; இறங்கி வரேளா? வேண்டாம்மாமி,
நீங்க உச்சஸ்தாயிலேயே இருங்கோ, இறங்கியெல்லாம்
வரவேண்டாம். நாங்க ரொம்ப
சாதாரணமானவா, எங்க உழைப்பைநம்பித்தான்
வாழ்ந்துண் டிருக்கோம். இப்போகூட இந்த வீட்டை வாங்கியிருக்கோம். பாங்குல லோன்போட்டுத்தான்
வாங்கியிருக்கோம். வேலைலேயும்பதிவி ஒசந்திருக்கு. சம்பளமும் அதிகமாத்தான் வர்றது.
நானும் நல்ல குடும்பத்துக்கு ஏத்த அடக்கமான பொண்ணாத்தான் பார்த்துண்டிருக்கேன். போயிட்டு வாங்கோ.” என்று சொல்லிய மங்களம் விருட்டென்று எழுந்து உள்ளே சென்று விட்டாள். கணேஷும் வெளியில் பராக் பார்த்துக்கொண்டிருந்தான்.
இருவருக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை. முகத்தைத்
தொங்கப்போட்டபடி வெளியேறினர். போகும்போது, ``மறுபடியும் நன்னா யோசிச்சு முடிவை சொல்லுங்கோ.
நாங்க அப்புறமா வர்றோம்” என்று சொல்லியபடி சாலையில்
இறங்கி நடந்தனர்.
இருவரும் சாலையில் நடந்து செல்லும்போது, நடேசன்,
``ஏண்டி நாம அவாளைப் படுத்தின பாட்டுக்கு, நம்மளை
ஆத்துக்குள்ளே நுழைய விட்டதே பெரிய விஷயம். ஏதோ திகைஞ்சு வரும்னு தோணினப்போ,
நீ என்னமோ இறங்கிவர்றோம் ஏறிவர்றோம்னு ஏதோ தத்துப்பித்துன்னு உளறிட்டே.
கொஞ்சம் சமாதானம் ஆகிண்டு வந்தவாகூட உன்னோட இந்த வார்த்தையால ரொம்ப ரோஷப்பட்டுட்டா. இப்போநீ மாறிட்டேங்கற விஷயத்தைச்
சொல்லிண்டிருக்கோம், அவாளும் நம்மை மதிச்சு பேசிண்டிருக்கா,
அப்போபோய் உன்னோட சுய ரூபத்தைக் காட்டிட்டியேடி. அந்தம்மா சொல்றபடி நீயெல்லாம் இந்த
ஜென்மத்துல திருந்தவே மாட்டேடி” மனைவியைக் கடிந்துகொண்டே நடந்தார்
நடேசன்.
``என்னமோ வாய்தவறி கோபத்தை அடக்கிண்டு சொல்லிட்டேன்னா, என்னோட அடங்காத்தன்மை அவ்வளவு சீக்கிரமாவா போயிடும். இனிமேல் ஜாக்ரதையா பேசப்பழகிக்கறேன். என்னவோ, இவாளிட்டே
வந்து பேசிட்டோம். பவானி கேட்டுண்டதாலதான் இவ்வளவுதூரம் நிதானமா
பேசினோம். இது எல்லாத்தையும்
பவானிட்டே சொல்லிடலாம். அவள் என்ன சொல்லறான்னு பார்க்கலாம். எனக்கு என்னவோ, பவானி நேரடியா கணேசன்டே போய்ப் பேசினா சரியாயிடும்னு தோணறது. மாப்பிள்ளை மனசுலேயும் இன்னும் பவானி
இருக்காங்கறது சம்பந்திமாமி பேசினதிலேர்ந்து நன்னாப் புரியறதுன்னா.” என்று சொன்னவள், சாலையில் சென்ற ஆட்டோவை நிறுத்தி அதில்
ஏறிக்கொண்டனர்.
நளினி, மறுபடியும் கணேஷின் அருகில் வந்து அமர்ந்துகொண்டாள்.
``ஏண்டா கணேஷ், அந்த அம்மாவோட அகம்பாவம் நிச்சயமா போயிருக்கும்னா நினைக்கிறே? ஆனால், கடைசியா
சொன்னாளே இறங்கி வர்றோம்னு அதிலேர்ந்து அவள் இன்னும் அப்படியேதான் இருக்காள்னு புரியல்லை? அதுசரி, யார்
எப்படி இருந்தால் நமக்கென்ன. ஆனால், அந்த
பொண்ணு பவானி, தன் இஷ்டம்போல நடந்திண்டிருக்காளே, சினிமாவுலகூட நடிச்சிருக்காளே, ஒழுக்கமாவா இருந்திருப்பா?
இல்லை, இருந்திருக்க முடியும்கறே?” நளினி மீண்டும் பேச்சை ஆர்மபித்தாள்.
``இல்லேமா., நீ நினைக்கிறமாதிரி இல்லை. நிச்சயமா பவானி ஒழுக்கம் கெட்டு நடந்திண்டிருக்க மாட்டா. அவளைப்பத்தி எனக்கு நன்னாத்தெரியும்.
அவள் நெருப்புமாதிரி.
அவள் சம்மதமில்லாமல் அவளை யாரும் நெருங்கிட முடியாது.
சினிமா உலகம் இப்போல்லாம் ரொம்ப மாறிப்போயிருக்கும்மா. கற்பை இழக்காமல், நடிக்கறதோடமட்டும் இருக்கிறவா நிறையபேர்
இருக்காங்கம்மா. ஆனாலும்,
சமய சந்தர்ப்பம் அவாளையும் தப்புபண்ண வெச்சுடும். அதைத்தானே நீயும் சொல்லறே?”
``ஆமாண்டா கணேஷ், ஆனால், நீதானே, பவானி, ஆபீசுல மத்த ஆண்களோட கைகோத்துண்டு சுத்தறான்னு சொன்னே. ட்ரசெல்லாம்கூட ரொம்ப மாடர்னா போட்டுக்கறதா
சொன்னே; ஆனால்,
ஒரு பெரிய பணக்காரனைக் கல்யாணம் பண்ணிண்டுட்டு, அன்னிக்கு ராத்திரியே, அவனை விட்டுட்டு அவனோட பணத்தையும்
எடுத்துண்டு ஓடிவந்துட்டான்னு கேள்விப் பட்டதா சொன்னியே. அது எதனால இருக்கும்? ஒருவேளை அவன் அயோக்கியன்னு தெரிஞ்சு,
அவனிட்டே கற்பைப் பறிகொடுக்காமல் ஓடி வந்திருப்பாளோ. அவனுக்குத் தண்டனையா அவனோட பணத்தையும்
சுருட்டிண்டு வந்திருப்பாளோ? இதையெல்லாம் நினைச்சா, அவள் தப்பு பண்ணியிருக்கமாட்டான்னுதான்
தோணறதுடா கணேஷ்.” சொல்லிவிட்டு தனது மைந்தனின் முகத்தைப் பார்த்தாள்
நளினி. ஆம் என்பதற்கு அடையாளமாகத் தலையைமட்டும் ஆட்டிவைத்தான்
மைந்தன்.
நான்கு
``ஏம்மா, ரெண்டுபேரும் என்னமோ பேசி மாப்பிள்ளையை சம்மதிக்க
வெச்சு கையோட கூப்பிட்டுண்டு வந்துடறதுபோல போனீங்களே, இப்போ என்ன
ஆச்சு; என்மேலேயே சந்தேகப்படறாங்க
இல்லையா? என் கற்பு மேல சந்தேகப்படறவங்களோட நான் எப்படிம்மா மறுபடியும்
போய் சேர்ந்து வாழ முடியும்? விட்டுடும்மா. இதெல்லாம் சரியா வராது.” என்று கண்ணீர்மல்க கத்தினாள்
பவானி.
``ஏண்டி சந்தேகப்படமாட்டாங்க?
நீ நடந்துண்டது மட்டும் என்ன, ரொம்ப சாதாரணமாவா
நடந்துண்டே? இல்லை அடக்க
ஒடுக்கமாத்தான் புக்காத்துல வாழ்ந்தியா?
அந்தம்மா பாவம்டி.
உன்னை உள்ளங்கையில் வெச்சுத்தானே தாங்கிண்டிருந்தா; நீங்க ரெண்டுபேரும் சந்தொஷமா இருக்கணும்னுதானே,
உங்களை ஏ.சி.ரூம்ல படுக்க
வெச்சிட்டு, தான் மட்டும் தனியா, ஹால்ல
கொசுக்கடியில, புழுக்கத்துல படுத்துண்டா. உன்னோட துணிமணியெல்லாத்தையும் ஒருநாளாவது
துவைச்சிருக்கியா; அந்தம்மாதானே உன்னை தன்னோட பொண்ணா நினைச்சு
உன்னோட துணியைக்கூடத் துவைச்சுப்போட்டிருக்கா. ஆனால், அந்த
அம்மாவையும் உன் புருஷனையும் உனக்குப்புடிக்கல்லை. இன்னும் சொல்லப்போனா, நீ உன்னோட புருஷன் இஷ்டத்துக்கு இருந்திருக்கியா? இல்லை வளைஞ்சு குடுத்துத்தான் போயிருக்கியா? எதுக்கெடுத்தாலும் குத்தம் கண்டுபிடிக்கறது,
ஏழைக்குடும்பம்னு நையாண்டி பண்ணறது, கேவலமா பேசறதுன்னுதானே
நடந்துண்டிருந்தே. அவனுக்கு
தெரியறப்பலவே, உன்னோட
வேலை பார்க்கற ஆண்களோட கைகோத்துண்டுவேற சுத்தியிருக்கே. இதையெல்லாம் அவன் நினைச்சுப்பார்த்தான்னா,
உன்மேல சந்தேகம் வராம என்ன பண்ணும்; அவனைக் காதலிச்சுத்தானே
கல்யாணம் பன்ணிண்டே. அவனைத்தான் பண்ணிப்பேன்னு என்கிட்டே எவ்வளவுதடவை
அடம்புடிச்சு அழுதிருப்பே, என்னைத் திட்டியிருப்பே?....”
என்று சொல்லிக்கொண்டே போனதனது தாயைக் கையமர்த்தி அடக்கியவள்,
கத்தினாள்.
``ஆமாம்மா, கணேஷை லவ் பண்ணும்போது அவனோட பிஹேவியர்,
ஜாலிடைப், அர்த்தபூர்வமான பேச்சு, ஸ்டைல்னு என்னவெல்லாமோ புடிச்சுதுதான். கல்யாணத்துக்கு அப்புறம் என் சினேகிதிகளோட
புருஷன்களைப் பார்த்தபோதுதான் இவர் அவர்களைவிட மட்டம்னு புரிஞ்சுது. அவங்களெல்லாம் ரொம்ப ஹை சொசைடில பழகிண்டிருந்தாங்க. ஆனால், இவர்
பத்தாம்பசலித்தனத்திலேயே ஊறிப்போயிருந்தார். எல்லாத்துக்கும் அவர் அம்மாவைக்கேட்டுத்தான்
செய்வார். நான் இங்கே
ரொம்ப செல்லமா வளர்ந்தவ, என் துணிமணிகளைக்கூட நான் தோச்சுண்டதில்லை. சில சமயங்கள்ல, அப்பா துணிகளையும் உன் துணிகளையும் வாஷிங் மெஷின்ல போட்டுத்தோச்சிருக்கேனே
தவிர, கையாலே தோய்க்கவே தெரியாது. ஆனால் அந்தாத்துல வாஷிங் மெஷ்னெல்லாம்
கிடையாது. கையாலதான்
தொச்சுக்கணும். அவரோட
ட்ரசைக்கூட நான்தான் தோய்க்கணும்னா, எனக்கு கோவம் வராதா என்ன? இந்த மாதிரி ஆரம்பிச்சுத்தான் அவங்களைப்
பிடிக்காமலே போச்சு. ஆனால் அவங்க ரெண்டுபேரும் ரொம்ப நல்லவன்கதான். நான் இல்லேன்னு சொல்லமாட்டேன்.
``நான் நல்ல பணக்கார வாழ்க்கை வாழணும்னு ஆசைப்பட்டேன். என் ப்ரண்ட என்கிட்டே பீத்திக்கிறமாதிரி நானும் அவங்ககிட்டே பீத்திக்கணும்னு
ஆசைப்பட்டேன். ஆனால்,
அவங்களை விட்டு வந்து பணக்கார வாழ்க்கை வாழலாம்னு நினைச்சேன். அதுவும் சரியா வரல்லை. கொஞ்ச நாளைக்குப் பிறகுதான் தெரிஞ்சது,
என்னோட சினேகிதிகளெல்லாம் பெருமையா பீத்திண்டதெல்லாம் வெறும் ஜெம்பத்துக்குத்தான்னும்,
அவங்க ஹஸ்பெண்டுக்கும் அவங்களுக்கும் அவ்வளவு அண்டர்ஸ்டாண்டிங்க் இல்லைங்கறதும்
மத்தவா மூலமாவும், சில சமயங்கள்ல, அவங்கமுலமாகூட
தெரிஞ்சுண்டேன். அப்போதான்
நான் செஞ்சது எவ்வளவு பெரிய தப்புன்னு ஃபீல் பண்ணினேன். ஆனால் என்ன பிரயோஜனம், நான்தான் விவாகரத்து வாங்கிட்டேனே. அதன்விளைவுதான், கணேஷ் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் யாரோடயாவது சுத்தரமாதிரி நடிச்சேன். எப்படியோ அவனைக் கேவலப்படுத்தி டைவர்ஸ்
வாங்கிட்டேன். அதுக்குப்புரமும்
அவர் என்னைத் தப்பா நினைச்சு வெறுக்கட்டும்னுதான் அப்படியெல்லாம் செஞ்சேன். ஆனால் அவரோட மனசு எனக்கு நன்னாத்தெரியும். அவரால என்னை மறக்கமுடியாதுன்னு.
``ஆனால் என்னாலேயும் அவரை மறக்கமுடியல்லைன்னாலும், அந்த
பத்தாம்பசலித்தன வாழ்க்கை எனக்குப்புடிக்கல்லை. சரி, அம்மா
ஆசைப்படற மாதிரி பெரிய பணக்காரியா ஆகிடலாம்னு நினைச்சா, என்னை
ஏமாத்தற ஆளுங்கள்தான் இருக்காங்களேதவிர, என்னைப் புடிஞ்சுண்டு
அன்பா பழகறவங்க யாரும் இல்லைன்னு புரிஞ்சுண்டேன். ஆபீசுல, நான்
ஏதோ சம்பாதிச்சாலும், நிறைய சம்பாதிக்கணும்கிற வெறிதான் இருந்தது. அதுக்காக பல கம்பெனிகள் மாறினேன். எதுவும் சரியா வரல்லை. அப்போதான் யாழினி வந்தா. ரெண்டுபேருமா சேர்ந்துதான் சினிமாவுல
நடிக்கலாம்னு போனோம். ஏனோ எனக்கு சினிமாவுல நடிக்க சம்மதமில்லை. யாழினியோட
வற்புருத்தலினாலதான் சினிமாவுல நடிக்கப்போனேன். என்னை அந்த டைரக்டருக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. அவர் நினைக்கும் கதா நாயகி வேஷத்திற்கு
நான்தான் பொருத்தம்னு என்னை தேர்ந்தெடுத்தார். இரண்டாவது கதாநாயகியா
யாழினியைத் தேர்ந்தெடுத்து எங்க ரெண்டு பேருக்கும் தலா அம்பது லட்சம் சம்பளம் பேசினார்.
``அம்பது லட்சம்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தாலும், ஏதோ மனத்தை உருத்திண்டே இருந்தது.
நாம தப்பு பண்ணறோமோன்னு உள் மனசு சொல்லிண்டே இருந்தது. அத்தோட சினிமா ஷூட்டிங்கின்போது சிலபேர்
என்னை தப்பா தொட்டுப்பார்க்க முயல்றதும், சிலர் வாய்திறந்தே தப்பா
நடந்துக்க கேட்கறதுமா இருந்ததால எனக்கு சினிமாவில நடிக்கவே பிடிக்கல்லை. யாழினி ஃபாரின்ல அனுபவப் பட்டவள்
அதனால அவளால எல்லாத்துக்கும் ஈடுகொடுக்க முடியறது. நல்லவேளையா என்னோட முதல் படம முடியறவரையில
யாரையும் நான் கிட்டே நெருங்கவிடாம தப்பிச்சுண்டுட்டேன். படம் முடிஞ்சப்புறம்தான் இனிமேல்
சினிமாவே வேண்டாம்னு முடிவெடுத்தேன்.
``ஆனாலும், அந்த படத்துல நடிக்கும்போதுதான் ஒரு விஷயம்
எனக்கு நன்னா தெளிவாச்சு. அந்தப் படத்தின் கதைதான் எனக்கு அதை சொல்லிப் புரியவெச்சதுன்னே சொல்லலாம். அதாவது ஆடம்பர வாழ்க்கையும்,
பணக்கார வாழ்க்கையும் நிலையில்லை. அதில் அவ்வளவு
சுகமும் கிடையாது. பணமும்,
ஆடம்பரமும் இருந்தால் நிம்மதியும், சந்தோஷமும்
போயிடும். நாம் சந்தோஷமாக,
நிம்மதியாக வாழவேணுமானால், வரும் வருமானத்திலும், கையிலிருப்பதையும் வெச்சுண்டு வாழறதுலதான்
இருக்குங்கிறதை புரிஞ்சுண்டேன். அன்னிலேர்ந்து, நான் செஞ்சது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னும்,
கானல்நீரைத்தேடித்தான் இத்தனை நாளும் ஓடியிருக்கேன்னும் புரிஞ்சுது. அம்மா பணம்பணம்னு அலைஞ்சாலும்,
என்னைப்போல ரொம்ப ஓவரா இல்லைன்னு புரிஞ்சுண்டேன்.
``அதையெல்லாம் இனிமேல் நினைச்சு என்ன பிரயோஜனம்; நானும்சரி,
நீயும்சரி, கணேஷையும், மாமியாரையும்
ரொம்பப் படுத்திட்டோம். ரொம்ப ஏளனம் பண்ணிட்டோம். அவமானப்படுத்திட்டோம். பிடிவாதமா விவாகரத்தும் வாங்கிட்டேன். அவங்களை அசிங்கப்படுத்தறதா நினைச்சுண்டு
நான் அசிங்கப்பட்டு இப்போ அனாதையா நிக்கறேன். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. என் யோக்கியதை எனக்கு நல்லாவே புரியறது.
இப்போ எல்லாத்தையும் நினைச்சு என்ன பிரயோஜனம்?
``என் மாமியார்தான் என்னை மன்னிகமாட்டேங்கறாளே. அவரும் என்னை மறக்கல்லேன்னாலும், என்மேல சந்தேகம் வர்றதுல நியாயம்
இருக்கத்தானே செய்யும். இப்போ நான் எல்லாத்தையும் மறந்து, அவங்களிட்டே மன்னிப்பு
கேட்டு அவாளோட வாழவும் தயாராயிருக்கேன். கண்கெட்டபின்னாடி சூரிய
நமஸ்காரம் பண்ணறதுனால ஒரு பிரயோஜனமும் இல்லைங்கறதை இப்போ புரிஞ்சுண்டுட்டேன் அம்மா.”
அப்பொழுது சாத்தியிருந்த வாயிற்கதவைத் திறந்துகொண்டு, நளினியும் கணேஷும் உள்ளே நுழைந்தனர். ``இப்போவாவது நல்ல புத்திவந்ததே.
நீ கானல்நீரைத்தேடித்தான் ஓடிண்டிருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சது.
நீ தப்பு பண்ணமாட்டே, உன்னால தப்பும் பண்ணமுடியாதுங்கறதுலேயும்
நானும் கணேஷும் ஆணித்தரமா நம்பறோம்.
ஆனால், உங்க அப்பாவும் அம்மாவும் எங்காத்துக்கு
வந்து பேசினப்போ நாங்க அதை அவ்வளவா நம்பல்லை. ஆனால், அதெல்லாம்
உண்மைதானான்னு தெரிஞ்சுக்கவும், உன் மனசைப் புரிஞ்சுக்கவும்,
அவங்க பின்னாலேயே புரப்பட்டு வந்துட்டோம். இத்தனைநேரம்
நீங்க பேசிண்டிருந்த எல்லாத்தையும் வாசல்ல நின்னுண்டே கேட்டுட்டோம். இனிமேலும் நீதான் எங்காத்து மாட்டுப்பொண்.
கணேசனுக்குப் பொண்டாட்டி.
இந்தாடா கணேசா, இந்த மஞ்சள்கயிரை அவள் கழுத்தில
கட்டு. இப்போவும் நல்ல
நேரம்தான்.” என்று சொல்லி, தயாராக வைத்திருந்த
மஞ்சள் கயிரை கணேஷின் கைகளில் கொடுத்தாள் நளினி.
பவானி இருவரையும் நமஸ்கரித்தவள், கண்களில் நீர் தளும்ப
கணேசன் கட்டிய தாலியைத் தனது கழுத்தில் வாங்கிக்கொண்டாள். அப்பொழுது பக்கத்து இல்லத்து தொலைக்காட்சியிலிருந்து
மேளமும், நாதஸ்வர சப்தமும் முழங்கியது அனைவரது மனத்திலும் சந்தோஷத்தையும்
நிம்மதியையும் நிறைத்தது.
சுபம்.
கருத்துகள்
கருத்துரையிடுக